டெல்லி: தமிழ்நாட்டிற்கு 30.6 டி.எம்.சி. நீரை உடனே திறந்துவிடுங்கள் என கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
மேகதாது அணை தொடர்பான பரபரப்புக்கு மத்தியில் இன்று காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 13-வது கூட்டம் டெல்லியில் நடை பெற்றது. காவிரி ஒழுங்காற்று குழுவின் தலைவர் நவீன்குமார் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர், பொதுப்பணித் துறை செயலாளர், ஆணையத்தின் உறுப்பினர், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர் பங்கேற்றனர். மேலும்,கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரியை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
ஆணைய கூட்டத்தில், மேகதாது அணை குறித்து விவாதிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு சார்பில், அம்மாநில அதிகாரிகள் வலியுறுத்தினார். இதற்கு தமிழகஅரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த விஷயம் தொடர்பாக 4 மாநிலங்கள் சம்மதித்தால் மட்டுமே மேகதாது அணை பற்றி விவாதிக்க வேண்டும் என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்தது. அதை ஏற்று, மேகதாது அணை குறித்து விவாதிக்க முடியாது என்று காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, கர்நாடக அரசு வழங்க வேண்டிய 30.6 டி.எம்.சி., நீரை காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும் என்றும், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்கு தர வேண்டிய 30.6 டி.எம்.சி., நிலுவையை உடனே திறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
அதற்கு, பதில் தெரிவித்த கர்நாடக அரசு அதிகாரிகள், தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீர் ஏற்கனவே காவிரியில் திறந்து விட்டுள்ளோம் என கூறினார்.
ஆனால், தென்மேற்கு பருவமழை காரணமாக அணைகள் நிரம்பிவிடக்கூடாது என்பதால் உபரி நீர் திறந்து விடப்பட்டது என தமிழக அரசு சார்பில் முறையிடப்பட்டது. அதை ஏற்ற காவிரி மேலாண்மை ஆணையம், கர்நாடக அரசு உடனே தண்ணீர் திறந்து விடுமாறு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய நிலுவையில் உள்ள 30.6 டி.எம்.சி. தண்ணீர் உடன், செப்டம்பர் மாதத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரையும் காவிரியில் உடனே திறக்க ஆணையம் உத்தரவிட்டது.