டில்லி
இன்று டில்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 13 ஆம் கூட்டம் நடைபெற உள்ளது
காவிரி நதிநீர் பங்கீடு குறித்து கர்நாடகா மற்றும் தமிழகத்துக்கு இடையே வெகுகாலமாக பிரச்சினை இருந்து வருகிறது. இதைத் தீர்க்க காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆயினும் இந்த ஆணையத்தின் தீர்ப்பை மதித்து காவிரி நீரைத் திறந்து விடக் கர்நாடக அரசு மறுத்து வருவது தொடர்ந்து வருகிறது.
தற்போது காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் ஒரு அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்குத் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாவடங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆயினும் கர்நாடக அரசு அணை கட்டுவதில் பிடிவாதம் காட்டி வருகிறது.
இந்நிலையில் இன்று டில்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 13 ஆம் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய 4 மாநில அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டம் காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் நவீன்குமார் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் கர்நாடக அரசைத் தமிழகத்துக்கு உரியக் காவிரி நீரைத் திறந்து விடவேண்டும் எனத் தமிழக அரசு வலியுறுத்த உள்ளது. அத்துடன் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதில் பிடிவாதம் காட்டுவதை எதிர்த்து தமிழக அரசு பதிவு செய்ய உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.