திருவனந்தபுரம்
கொரோனா பரவல் மிகவும் அதிகரித்துள்ளதால் இன்று முதல் கேரளாவில் மீண்டும் இரவு ஊரடங்கு அமலாகிறது.
கடந்த சில வாரங்களாகக் கேரளாவில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. அகில இந்திய அளவில் தினசரி கொரோனா பாதிப்பில் கேரள மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. நாட்டின் தினசரி பாதிப்பில் 60% மேல் கேரளாவில் பாதிப்பு ஏற்படுகிறது.
நேற்று கேரளாவில் 29.836 பேர் பாதிக்கப்பட்டு 40,07,408 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று வரை 20,541 பேர் கொரோனாவால் உயிர் இழந்து 37,73,754 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,12,596 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பரவலைத் தடுக்க கேரள அரசு பல தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
சுமார் 2 வாரங்களுக்கு முன்பு கேரளாவில் அமலில் இருந்த ஞாயிரு முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் அதிகரிப்பால் நேற்று முதல் மீண்டும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தவிர இன்று முதல் இரவு நேர முழு ஊரடங்கும் அமலாக உள்ளது.