மயிலாடுதுறை
கொரோனாவால் நிறுட்தப்பட்டுள்ள பாசஞ்சர் ரயில்கள் படிப்படியாக விரைவில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று திருச்சி மண்டல ரயில்வே கோட்ட மேலாளர் மனிஷ் அகர்வால் கடலூரில் இருந்து தனி ரயிலில் சிதம்பரம், சீர்காழி வழியாக மயிலாடுதுறை ரயில் நிலையத்துக்கு வந்தார். அங்கு அவருக்கு எஸ் ஆர் எம் யு தொழிற்சங்க கோட்ட தலைவர் மணிவண்ணன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மணிஷ் அகர்வால் ரயில்வே ஊழியர்கள் தங்கும் அறை, நடைபாதை, குடிநீர் வசதிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் ரயில்வே பயணிகள் சங்கத்தினர் விரைவு வண்டிகளை முதல் பிளாட்பாரத்தில் நிறுத்த வேண்டும் எனவும் வயதான பயணிகளை ஏற்றிச் செல்ல பேட்டரி வாகனம் ஏற்பாடு செய்வது போன்ற கோரிக்கைகளை அளித்துள்ளனர்.
அதன் பிறகு மணிஷ் அகர்வால் செய்தியாளர்களிடம், ”விரைவில் காரைக்கால் பேரளம் மார்க்கத்தில் அகல ரயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டு இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி அகல ரயில் பாதை பணிகள் நடைபெறுவதில் சில பிரச்சினைகள் உள்ளதால் அவற்றைத் தீர்க்க நடவடிக்கை எடுப்போம்.
மயிலாடுதுறை தரங்கம் பாடி வழி ரயில் தடத்தினை புதுப்பிப்பது குறித்து கவனத்தில் கொள்ளப்படும். கொரோனா ஊரடங்கு காரணமாகத் திருச்சி கோட்டத்தில் மட்டும் 22 பாசஞ்சர் ரயில்கள் நிறுத்தப்பட்டன. இனி விரைவில் அவை படிப்படியாக இயக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.