டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மத்தியஅரசுக்கு எதிராக அடுத்த மாதம் 25-ந்தேதி (செப்டம்பர்) பாரத் பந்த் (நாடு தழுவிய வேலை நிறுத்தம்) போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கத்தினர் அறிவித்து உள்ளனர்.
மத்தியஅரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் ஓராண்டை நெருங்கி உள்ளது. வேளாண் சட்டங்களை அமல்படுத்த, உச்சநீதி மன்றம் இடைக்கால தடை விதித்து, இந்த சட்டம் குறித்து ஆராய, 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது. ஆனால், இந்த குழுவினருடன் விவசாய சங்கத்தின் பேச முன்வரவில்லை. இதற்கிடையில், மத்திய அரசும் விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர 11 கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை.
வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதே தங்களின் கோரிக்கைகள் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் கூறி வருகின்றனர். பல்வேறு போராட்டங்களை நடத்தியும் மத்தியஅரசு கண்டுகொள்ளாத நிலையில், செப்டம்பர் 25-ந்தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் (பாரத் பந்த்) ஈடுபட விவசாயிகள் அழைப்பு விடுத்து உள்ளனர்.
இது தொடர்பாக சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பை சேர்ந்த ஆஷிஷ் மிட்டல் நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வேளாண் சட்டங்களுக்கு எதிராக, செப்டம்பர் 25-ந்தேதி பாரத் பந்த் நடத்த நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம். கடந்த ஆண்டும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது. அந்த வேலை நிறுத்தம் வெற்றி பெற்றது. அதைவிட பெருவெற்றியை அடுத்தமாதம் நடத்தும் வேலை நிறுத்தம் பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.