சென்னை: தமிழ்நாட்டில் ஆகஸ்டு 30ந்தேதி (நாளை மறுதினம்)  முன்பதிவில்லா பயணிகள் ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில் நாடு முழுவதும் மீண்டும் போக்குவரத்து சீராகத்தொடங்கி உள்ளது. பஸ், ரயில், விமான போக்குவரத்துக்கள் நடைபெற்று வருகின்றன.தமிழ்நாட்டில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமின்றி, புறநகர் ரயில் சேவைகள், மெட்ரோ ரயில் சேவைகளும் நடைபெற்று வருகின்றன. ஆனால் முழுமையான பயணிகள் ரயில்கள் இயக்கப்படாமல் உள்ளது.  இதனால் பயணிகள் ரயிலை இயக்குமாறு ரயில்வே கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன.

இதுதொடர்பாக தமிழக எம்.பி.க்கள்  சு.வெங்கடேசனும், கலாநிதி வீராச்சாமியும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவை நேரில் சந்தித்து மனு வழங்கினார்கள். இந்த கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு நாடு முழுவதும் பயணிகள் ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது.

இதைத்தொடர்ந்து30-ந் தேதி முதல் முன்பதிவு இல்லாத 5 பயணிகள் ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மொத்தம் 5 ரயில்களில் கேரளாவில் 2ரயில்களில் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை மதுரை-செங்கோட்டை-மதுரை பயணிகள் ரயில்,

மயிலாடுதுறை-திருவாரூர்-மயிலாடுதுறை,

திருச்சி-காரைக்கால்-திருச்சி ஆகிய ரயில்கள் இயக்கப்படுகின்றன.

மதுரையில் இருந்து வருகிற 30-ந் தேதி முதல் காலை 7.10 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத பயணிகள் ரயில் காலை 10.35 மணிக்கு செங்கோட்டை சென்றடையும் . மறுமார்க்கமாக செங்கோட்டையில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 7.10 மணிக்கு மதுரை சென்றடையும்.

திருச்சி-காரைக்கால் மயிலாடுதுறையில் இருந்து தினமும் (ஞாயிற்றுக்கிழமை தவிர) காலை 6.45 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் காலை 7.45 மணிக்கு திருவாரூர் செல்லும். மறுமார்க்கமாக திருவாரூரில் இருந்து இரவு 8.15 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 9.15 மணிக்கு மயிலாடுதுறை சென்றடையும்.

திருச்சியில் இருந்து 30-ந் தேதி முதல் காலை 6.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் காலை 10.45 மணிக்கு காரைக்கால் சென்றடையும். மறுமார்க்கமாக காரைக்காலில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 7.15 மணிக்கு திருச்சி சென்றடையும்.

கேரள மாநிலத்தில் 2 முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதாவது எர்ணாகுளம்- கொல்லம், கன்னூர்- மங்களூரூ இடையேயான முன்பதிவு இல்லாத சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது

கர்நாடக மாநிலத்தில் மைசூரு- பெங்களூரு யஸ்வந்தபுரம் இடையே முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் ஆக. 30 முதல் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக பெங்களூரு யஸ்வந்தபுரம்-மைசூரு இடையிலான முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது.

ரயில் எண்-07313-மைசூரு-பெங்களூரு யஸ்வந்தபுரம் இடையேயான முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் ஆக. 30-ஆம் தேதி முதல் மைசூரு ரயில் நிலையத்திலிருந்து காலை 7.45 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 3 மணியளவில் பெங்களூரு யஸ்வந்தபுரம் ரயில் நிலையத்தை வந்தடையும்.

ரயில் எண்-07314-பெங்களூரு யஸ்வந்தபுரம்-மைசூரு இடையேயான முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் ஆக. 31-ஆம் தேதி முதல் பெங்களூரு யஸ்வந்தபுரம் ரயில் நிலையத்தில் பிற்பகல் 12.15 மணியளவில் புறப்பட்டு, இரவு 7.40 மணிக்கு மைசூரு ரயில் நிலையத்தைச் சென்றடையும்.