சென்னை: அண்ணாப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் ஏற்கனவே நடைபெற்ற  செமஸ்டர் தேர்வு முடிவுகள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக, கல்வி நிலையங்கள் மூடப்பட்டதால், அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய ஆன்லைன் செமஸ்டர் தேர்வு, அரியர் தேர்வுகளில்  பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றன. ஏராளமானோரின் தேர்ச்சி கேள்விக்குறியாக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், மீண்டும் தேர்வை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும்,  கடந்த ஆண்டு (2020) நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட வேண்டிய பருவத் தேர்வுகள் கொரோனா பாதிப்பின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.  இந்த தேர்வுகள் அனைத்தும்,  பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஆன்லைன் முறையில் நடைபெற்றன.

இந்த நிலையில்,  பி.இ, பிடெக், எம்.இ, எம்டெக் படிப்புகளின் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு, இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மற்றும் அரியர் தேர்வு முடிவுகள்  கடந்த ஏப்ரல் 11-ம் தேதி அண்ணாப் பல்கலைக்கழகம் வெளியிட்டது.

இந்தநிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான 2020ம் ஆண்டுக்கான நவம்பர், டிசம்பர் மற்றும் 2021ம் ஆண்டுக்கான ஏப்ரல், மே மாத செமஸ்டர் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.

தேர்வு முடிவுகளை அண்ணாப் பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.