சென்னை: தொழிற்படிப்புகளில் 7.5% உள்ஒதுக்கீடு செய்யும் வகையிலான சட்ட மசோதாவை முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக மானியக்கோரிக்கைகள் குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று 2021 – 2022 ஆம் ஆண்டிற்கான உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இன்றைய கூட்டத்தொடரில். முதல்வர் மு.க.ஸ்டாலின் , தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தாக்கல் செய்தார். மாநிலத்தில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு விதிமுறைகள் பாதிக்காமல் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மசோதா எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் இன்றே குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவி ஏற்றதும், தொழிற்படிப்புகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்தும் வகையில், கடந்த ஆண்டுகளில் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைவாக இருந்த காரணத்தால் , அரசுப்பள்ளி மாணவர்கள் தொழில் கல்வி பயில்வதற்கு தடையாக உள்ள காரணிகள் என்னவென்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முருகேசன் அவர்கள் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தின் ஆய்வு அறிக்கை சமீபத்தில் முதல்வரிடம் வழங்கப்பட்டது. அதை ஆய்வு செய்த தமிழகஅரசு, அரசு பள்ளி மாணவர்கள் தொழிற்கல்வி பயிலும் வகையில், தொழிற்கல்விகளில் உள்ஒதுக்கீடு செய்யும் வகையிலான மசோதாவை கொண்டு வந்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில், மருத்துவ படிப்பில் சேர அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கியதைப் போன்றே, தொழிற்கல்வி படிப்புகளிலும் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் வகையிலான சட்ட முன்வடிவு இன்று தாக்கல் செய்யப்பட்டது.
ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. த. முருகேசன் அவர்கள் தலைமையிலான ஆணையம் பரிந்துரைத்தபடி, மருத்துவம் போன்றே, பிற இளநிலைத் தொழிற்கல்விப் படிப்புகளுக்கான சேர்க்கையிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டமுன்வடிவினை அறிமுகம் செய்தேன். pic.twitter.com/SZt4S8ZI8t
— M.K.Stalin (@mkstalin) August 26, 2021
2021 ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் இளநிலைத் தொழிற்கல்விப் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம் தொடர்பான சட்டமுன்வடிவினை சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தி மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் ஆற்றிய உரை முழு விவரம்…