சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த 1.74 லட்சம் மாணவர்களுக்கு ரேண்டம் எண் வழங்கப்பட்டுள்ளது. இதை இணையதளத்தை லாகின் செய்து மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.,
தமிழகத்தில் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் இருக்கும்அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு www.tneaonline.org என்ற இணையதளம் மூலமாக கடந்த ஜூலை 26-ம் தேதி தொடங்கிய விண்ணப்பப் பதிவு, ஆக. 24-ம் தேதி நிறைவடைந்தது. பொறியியல் படிப்புக்கு நடப்பாண்டு 1, 74,930 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில், ஒரு லட்சத்து 44 ஆயிரம் பேர் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தினர். கட்டணம் செலுத்தவும், சான்றிதழ்களைப் பதிவேற்றவும் நாளை (ஆக. 27) மாலை 5 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ரேண்டமில் பெரிய எண் பெற்ற மாணவர்களுக்கு தரவரிசையில் முன்னுரிமை வழங்கப்படும். ரேண்டம் எண்ணின் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில், விருப்பப் பாடம் மற்றும் 10-ம் வகுப்பு மொத்த மதிப்பெண்ணைக் கணக்கீடு செய்யும் முடிவு நடப்பாண்டு முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் சமவாய்ப்பு எண் எனப்படும் ரேண்டம் எண் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பித்த மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 50 உதவி மையங்களில் நடைபெற்று வருகிறது.
கலந்தாய்வுக்கு தகுதிபெறும் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வரும் செப். 4-ம் தேதி வெளியிடப்படவுள்ளது.