லீட்ஸ்

ன்றைய முதல் நாள் மூன்றாம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 78 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்துள்ளது.

இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகள் விளையாட உள்ளது.  இதில் ஏற்கனவே இரு போட்டிகள் முடிவடைந்துள்ளன.  இதில் ஒரு போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.  ஒன்று டிராவில் முடிந்தது.   தற்போது இந்தியா1-0 என்னும் கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இன்று முதல் லீட்ஸ் நகரில் மூன்றாம் டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகிறது.  இந்த போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.  இதில் முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் கே.எல்.ராகுல் ஆட்டமிழந்தார். இந்திய அணியின் சொதப்பல் பேட்டிங்குக்கு இது முன்னோட்டமாக இருக்கும் என்று அப்போது யாருமே நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

பிறகு ஜேம்ஸ் ஆண்டர்சனின் வேகத்தைச் சமாளிக்க முடியாமல் புஜாரா, கோலி என அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழக்க, ரஹானே – ரோஹித் சர்மா இணை சற்று நம்பிக்கை அளித்தது. இவர்கள் 90 பந்துகளில் 35 ரன்களை மட்டுமே அடித்தாலும் மேற்கொண்டு விக்கெட் இழப்பின்றி பார்த்துக் கொண்டனர்.

உணவு இடைவேளைக்குச் சில நிமிடங்கள் முன்பு ராபின்ஸன் வீசிய பந்தில் ரஹானே 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்திய அணி 56 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற நிலையில் உணவு இடைவேளைக்குச் சென்றது.

பிறகு தொடர்ந்த ஆட்டத்திலும் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. ரஹானேவுக்குப் பிறகு களமிறங்கிய ரிஷப் பந்த் 9 பந்துகளில் 2 ரன்கள் சேர்த்திருந்தபோது ராபின்ஸன் பந்தில் ஆட்டமிழந்தார். பேட்டிங்கில் இந்தியாவின் கடைசி நம்பிக்கையான ரவீந்திர ஜடேஜா ஆடவந்தார்.

ஜடேஜாவும் ரோஹித் சர்மாவும் சேர்ந்து நிலைமையைச் சீராக்கப் பாடுபட்டனர். ஆனால் பவுண்டரி அடிக்க முடியாமல் மெதுவாக, ஒவ்வொரு ரன்னாக இந்தியாவின் ஸ்கோர் கூடியது. சுமார் 8 ஓவர்கள் இந்த இணை தாக்குப்பிடித்தது. ஆனால் ஓவர்டன் பந்துவீச்சில் ரோஹித் சர்மா 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அவருடைய அடுத்த பந்திலேயே புதிய பேட்ஸ்மேன் ஷமியும் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரை சாம் கரன் வீசவந்தார். இரண்டாவது பந்தில் ஜடேஜா (4) அடுத்த பந்தில் பும்ரா (0) என இவரும் அடுத்தடுத்து அதிரடி காட்ட வெறும் 67 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இந்தியா இழந்தது. வெறும் 11 பந்துகளில் இந்த 4 விக்கெட்டுகளை இந்தியா இழந்தது.

பிறகு இஷாந்த் சர்மாவும் முகமது சிராஜும் சற்று நேரம் சமாளித்து ஆட ஸ்கோரும் முந்தைய ஓவர்களை விட சற்று வேகமாகவே கூடியது. அடுத்த சில ஓவர்களில் முகமது சிராஜ் 3 ரன்களுக்கு ஓவர்டன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணி 78 ரன்களுக்கு அத்தனை விக்கெட்டுகளையும் இழந்தது. ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஓவர்டன் தலா 3 விக்கெட்டுகளையும், ஒல்லீ ராபின்ஸன், சாம் கரன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர். இன்று விக்கெட்டுகள் எடுத்த அனைவருமே வேகப்பந்து வீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று இன்னும் 40 ஓவர்களுக்கு மேல் மீதமிருப்பதால் இந்தியாவின் இந்த ஸ்கோரை இங்கிலாந்து அணி இன்றே முந்திவிடும் வாய்ப்புகள் இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.