காபூல்

ப்கானிஸ்தான் நாட்டின் பெயரை இஸ்லாமிய அமீரக ஆப்கானிஸ்தான் என தாலிபான்கள் மாற்றி உள்ளனர்.

அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய நிலையில், முக்கிய நகரங்களை படிப்படியாகக் கைப்பற்றி வந்த தாலிபான்கள், கடந்த 15-ம் தேதி தலைநகர் காபூலை பிடித்து இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியை தங்கள் வசம் கொண்டுவந்தனர். இதனால் அச்சமடைந்த ஆப்கான் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்காகக் கூட்டம் கூட்டமாக காபூல் விமான நிலையம் நோக்கிப் படையெடுத்தனர்.

இதனால் ஏற்பட்ட நெரிசல், அதனைக் கலைக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் விமான சக்கரங்களில் பயணித்து கீழே விழுந்தவர்கள் என நான்கு நாட்களில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். தாலிபான்கள் பொதுமக்கள் ஆப்கானில் இருந்து தப்பிக்க முயன்று உயிரை விடுவதற்குப் பதிலாக வீடுகளுக்குள்ளேயே இருக்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

தாலிபான்களின் ஆட்சிக்கு எதிராக அந்நாட்டின் பல்வேறு இடங்களில் மக்கள் தன்னெழுச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பலர் தாலிபான் கொடியை அகற்றிவிட்டு, ஆப்கானிஸ்தான் தேசியக் கொடியை ஏற்றி இதுதொடர்பான துப்பாக்கிச்சூட்டில் சிலர் பலியாகியுள்ளனர்.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டின் பெயரை இஸ்லாமிய அமீரக ஆப்கானிஸ்தான் எனப் பெயர் மாற்றியுள்ளனர்.  சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாமிய அமீரக ஆப்கானிஸ்தான் என்ற பெயரில்தான் தாலிபான்கள் ஆட்சி செய்து வந்தனர். பிறகு செப்டம்பர் 2001இல் அமெரிக்கப் படைகள் ஆட்சியைக் கைப்பற்றி ஆப்கானிஸ்தான் எனப் பெயரை மாற்றியது.