சென்னை

சென்னை பெருநகர காவல்துறை இரண்டாகப் பிரிக்கப்பட்டு புறநகர் பகுதிகளுக்குத் தனி ஆணையர் நியமிக்கப்பட உள்ளார்.

சென்னை பெருநகர காவல்துறையின் கீழ் 12 காவல்துறை மாவட்டங்களில் 130 காவல் நிலையங்கள் 20,000க்கும் மேற்பட்ட காவலர்களுடன் இயங்கி வருகிறது.   சென்னை பெருநகர காவல்துறை இரண்டாகப் பிரிக்கப்பட்டு பரங்கிமலையில் புதிய காவல்துறை ஆணையர் நியமிக்கப்பட்டு அவர் புறநகர்ப் பகுதிகளைக் கவனிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 2008 ஆம் ஆண்டு ஏற்கனவே அப்போதைய முதல்வர் கருணாநிதியால் சென்னை மாநகர காவல்துறை பிரிக்கப்பட்டது.   ஆனால் 2011 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா இந்த பிரிவை நீக்கி இரு ஆணையர்களையும் ஒன்றிணைத்தார்.   தற்போது மீண்டும் சென்னை காவல்துறை பிரிக்கப்பட்டு இதற்கான விவரங்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது .

தற்போது புறநகர் பிரிவில் உள்ள காவல்துறை மாவட்டங்களான பரங்கிமலை, அம்பத்தூர் மற்றும் மாதவரம் தவிர மேலும் இரு காவல்துறை மாவட்டங்கள் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.  இவற்றில் சென்னை விமான நிலையம், இந்தியப் போர்ப்படை அதிகாரிகள் பயிற்சி மையம், தாம்பரம் விமானப்படை நிலையம் ஆகியவை உள்ளடக்கப்பட உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

மாவட்ட எல்லை மற்றும் மாநில எல்லை பாதுகாப்பு வசதிகளுக்காகவும் சமூக விரோதிகளைக் கட்டுப்படுத்தவும் இந்த பிரிவினை அவசியம் என ஒரு மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் ஒரு கூடுதல் காவல்துறை இயக்குநரை நியமிப்பது குறித்தும் அரசு ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.