சென்னை: கொரோனா நோயாளிகளிடம் இருந்து அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்த 20 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அனுமதி ரத்து செய்து தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் தமிழகத்தில் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வந்த காலக்கட்டத்தில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைக ளுக்கும் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. அதற்காக சிகிச்சை கட்டணங்களையும் அரசு நிர்ணயித்தது. இதனால் பலர் தனியார் மருத்துவமனைகள் சேர்ந்து சிகிச்சை பெற்றனர்.
இந்த நிலையில், பல மருத்துவமனைகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், தமிழகம் முழுவதும் கொரோனா நோயாளிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக 20 தனியார் மருத்துவமனைகளின் சிகிச்சை அனுமதி ரத்து செய்து சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை திருப்பி கொடுக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி ஒரு கோடியே 87 லட்சம் நோயாளிகளுக்கு திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளி குடும்பங்களுக்கு ரூ.60 லட்சம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவ பணிகள் இயக்குனர் குருநாதன் கூறுகையில், தமிழகம் முழுவதும் கொரோனா நோயாளிடம் இருந்து அதிக கட்டணம் வசூலித்ததாக 222 புகார்கள் மே முதல் வாரத்தில் வந்தன. சென்னையில் உள்ள 92 மருத்துவமனைகள் மீது புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலித்த 20 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது என்றார்.