சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளை கையாள,  அதிமுகவில் வழக்கறிஞர் குழு அமைத்து, அதிமுக தலைமை உத்தரவிட்டு உள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது  திமுக அரசு போடும் ஊழல் வழக்குகளை எதிர்கொள்ளும் வகையில், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், தளவாய்சுந்தரம், சி.வி சண்முகம், எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் இன்பதுரை மற்றும் பாபுமுருகவேல் ஆகியோர் அடங்கிய வழக்கறிஞர் குழுவை அமைத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்  அறிவித்து உள்ளனர்.
முன்னதாக அதிமுக தலைமை அலுவலகத்தில்  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் தலைமையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக இரண்டாவது நாளாக  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அதிமுக சட்ட ஆலோசனை குழு அமைக்கப்பட்டு, அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் பலர் மீது, ஆளும் கட்சியினரின் தூண்டுதலால், பழிவாங்கும் எண்ணத்தோடு பொய் வழக்குகள் புனையப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

கழகப் பணிகளிலும், மக்கள் பணிகளிலும், அல்லும் பகலும் அயராது ஈடுபட்டு வரும் கழகத்தைச் சேர்ந்த அனைவருக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றென்றும் பாதுகாப்பு அரணாகத் திகழும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியால், திமுக-வினரின் தூண்டுதலால் கழகத்தினர் மீது தொடுக்கப்படும் பொய் வழக்குகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் வகையில், கழகத்தின் சார்பில் அமைக்கப்படுகிறது. “கழக சட்ட ஆலோசனைக் குழு” கீழ்க்கண்டவாறு

  1. திரு. D. ஜெயக்குமார், B.Sc., B.L., அவர்கள் கழக வழிகாட்டுக் குழு உறுப்பினர், கழக அமைப்புச் செயலாளர் வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்.
  2. திரு.என். தளவாய்சுந்தரம், B.Sc., B.L., M.L.A., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர்.
  3. திரு.C.Ve. சண்முகம், B.A., B.L., அவர்கள் கழக வழிகாட்டுக் குழு உறுப்பினர் விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
  4. திரு. P.H. மனோஜ் பாண்டியன், M.L., M.L.A., அவர்கள் கழக வழிகாட்டுக் குழு உறுப்பினர் கழக அமைப்புச் செயலாளர்

5. திரு.I.S.இன்பதுரை, B.A., B.L., Ex. M.L.A., அவர்கள் கழக தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர்

6. திரு.R.M. பாபுமுருகவேல், B.A., B.L., Ex. M.L.A., அவர்கள் கழக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் கழக செய்தித் தொடர்பாளர்

நம் அரசியல் எதிரிகளால் காழ்ப்புணர்ச்சியோடு பொய் வழக்குகளைப் பதிவு செய்யும்போது, அத்தகையவர்களுக்கு கழக சட்ட ஆலோசனைக் குழு, அந்த வழக்குகளுக்கான அனைத்து சட்ட உதவிகளையும் முழுமையாக செய்யும். எனவே, கழக உடன்பிறப்புகள், மேற்கண்ட குழுவினரை தொடர்புகொண்டு உரிய தீர்வு காணுமாறு கேட்டுக் கொள்கிறோம்”.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.