டெல்லி: குழந்தைகள் உடல், மனம் ரீதியாக பாதிக்கப்படுவதால், பள்ளிகளை திறக்க முன்னுரிமை அளிக்கலாம் என உலக சுகாதாரத்துறை தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், தொற்று பரவல் குறைய தொடங்கி உள்ளதால், பல மாநிலங்களில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால், கொரோனா 3வது அலை பரவல் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், நீண்ட காலமாக மூடப்பட்ட பள்ளிகளைத் திறக்கலாம் என்றும், அதற்கு முன்னுரிமை கொடுங்கள் என்று உலக சுகாதாரத்துறை தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட் பதிவில், நீண்ட காலமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் “குழந்தைகளின் மனம், உடல் மற்றும் கற்றல் திறன்களில் தாக்கம் ஏற்படும். அதனால், பள்ளிகளைத் திறப்பதற்கு முன்னுரிமை வழங்கலாம். அதேவேளையில், சமூக இடைவெளி, முக்கவசம், கைகளை சுத்தமாக வைத்திருப்பது போன்ற நடவடிக்கைகளையும் கடுமையான பின்பற்றப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளதுடன், அனைத்து பெரியவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தவேண்டும் என பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த சவுமியா சுவாமிநாதன், குழந்தைகளின் கல்வி பாதிக்காத வகையில் மாநிலங்கள் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும், ஏழை குழந்தைகள் நீண்ட நேரம் பள்ளிக்குச் செல்லாவிட்டால், விளைவு மோசமாக இருக்கும், அவர்களால் ஆன்லைன் கல்வி வசதியைப் பெற முடியாது, பள்ளிகள் திறக்கப்படாவிட்டால் அவர்களில் பலர் படிப்பைத் தொடர முடியாது என கூறியிருந்த நிலையில், தற்போது பள்ளிகளை திறக்க முன்னுரிமை கொடுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னதாக பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் நடத்திய ஆய்வில், 48 சதவிகித பெற்றோர்கள் கொரோனா தடுப்பூசி பெறும் வரை தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விரும்பவில்லை என்பது தெரியவந்துள்ளது. தங்களது பகுதி மற்றும் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று பூஜ்ஜியமாகக் குறைந்தால், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் எந்த தயக்கமும் இருக்காது என்று கூறியுள்ளனர். அதேவேளையில், 21 சதவிகித பெற்றோர்கள் பள்ளிகளைத் திறக்கும்போது தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.