பெங்களூரு
தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இருந்து கர்நாடகா வருவோருக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநில கொரோனா தொற்றில் அகில இந்திய அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கு நேற்றுவரை 29.21 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 36,948 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 28.61 லட்சம் பேர் குணமடைந்து தற்போது 22,676 பேர் சிகிச்சையில் உள்ளனர். கர்நாடக அரசு கொரோனா மேலும் பரவாமல் தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதையொட்டி கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பரவல் கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் அதிகமாக உள்ளதால் அம்மாநில எல்லைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன. அந்த எல்லைகளில் உள்ள 8 மாவட்டங்களில் இரவு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமலில் உள்ளது.
மேலும் மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழைக் கொண்டு வர வேண்டும். அத்துடன் அந்த சான்றிதழ் 72 மணி நேரத்துக்கு முன்பாக சோதிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
இது கார், பேருந்து, ரயில், விமானம் மூலம் வரும் அனைவருக்கும் பொருந்தும் நிபந்தனை ஆகும். கொரோனா அறிகுறியுடன் கர்நாடகாவுக்கு வருபவர்கள் 7 முதல் 15 நாட்கள் கட்டாயம் அரசு விடுதிகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.” என தெரிவித்துள்ளார்.