சென்னை: தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பெயரில் போலி சமூகவலைதள கணக்குகள், மின்னஞ்சல் உருவாக்கி வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்டது தொடர்பான புகாரில் 7 மர்ம நபர்கள் மீது வழக்குபதிவு செய்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பெயரில் போலி சமூக வலைதளங்கள் மற்றும் மின்னஞ்சல் தொடங்கி, இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு கருத்துக்கள் பரபரப்பப்பட்டு வந்தது. இதுகுறித்து அறிந்த பிடிஆர் சார்பில் அபிராமபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதில், தன் பெயரிலான போலி மின்னஞ்சல்கள் மூலம் இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்புவதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய சைபர் கிரைம் போலீசார், மதம், இனம் அடிப்படையில் இரு பிரிவினரிடையே பகைமையை தூண்டுதல், ஒரு மதத்தினரின் நம்பிக்கையை வேண்டுமென்றே புண்படுத்துதல், பொய்யான ஆவணங்கள் தயாரித்தல், அவதூறு பரப்புதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் 7 மர்ம நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.