சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு 6412 அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.
மருத்துவ நுழைவுப்படிபுக்கான தேர்வான நீட் தேர்வில், தமிழக மாணவர்கள் பலர் தேர்ச்சி பெறாத நிலையில், கடந்த அதிமுக அரசு, அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் வகையில் இலவச கோச்சிங் நடத்தி வந்தது. மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இடஒதுக்கீடும் அமல்படுத்தியது.
ஆனால், நடப்பாண்டி தமிழக சட்டமன்ற தேர்தல், கொரோனா ஊரடங்கு போன்ற காரணங்களால், அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி கொடுக்க முடியாத சூழல் உருவானது. மேலும் நீட் தேர்வை செத்து சய்வோம் என்று கூறி வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற திமுக அரசும், தற்போது, நீட் தேர்வை இந்த ஆண்டு எதிர்கொள்ள வேண்டும், விரைவில் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம் என்று கூறிவிட்டது. இதனால், அரசு பள்ளி மாணாக்கர்களிடையே நீட் தேர்வை எதிர்கொள்ளும் விருப்பம் குறைந்தது.
இந்த நிலையில், தமிழகத்திலிருந்து இதுவரை நீட் தேர்விற்கு 6 ஆயிரத்து 412 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 505 பேரும், குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 9 பேரும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது. கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு மாணவர் கூட நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகஅரசு கொண்டு வந்த 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டின் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் 313 பேருக்கு எம்.பி.பி.எஸ். சீட்டும், பி.டி.எஸ். படிப்பில் 92 இடங்கள் கிடைக்கும். மொத்தத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 405 இடங்கள் கிடைக்கும். ஆனால், இந்த ஆண்டு குறைந்த அளவிலான மாணவர்களே நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதால், தேர்ச்சி பெற்ற அனைவருக்குமே இடம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
https://patrikai.com/1990-new-medical-seats-in-tamilnadu-for-my-ruling-period-chief-minister-edappadi-gave-the-medical-seats-order-who-got-the-govt-school-students/