சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத சூழலை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,997 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளனர்.. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,69,398 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 196 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். கடந்த ஒருசில நாட்களாக மீண்டும் தொற்று அதிகரித்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து உள்ளது என்பதை ஒத்துக்கொண்டவர், தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத சூழலை கொண்டு வர தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
மாநிலம் முழுவதும் தொற்று பரவலை கட்டுப்படுத்த கொரோனா பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டுள்ளது, இந்தியாவிலேயே கொரோனா பரிசோதனை செய்வதில் தமிழகத்தில்தான் அதிக சோதனை நடத்தப்படுகிறது என்று தெரிவித்ததுடன், தற்போது 1.2 சதவிகிதம் என்ற அளவில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது என்று தெரிவித்தார்.