கீழடி: சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே கொந்தகையில் நடைபெற்று வரும் அகழ்வாய்வில், இரும்பு வாள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இந்த வாள் மறைந்த வீரனை நினைவுபடுத்தும் வகையில் உள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
தமிழ்நாடு தொல்லியல்துறையால் கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வுப் பணி பிப்ரவரி 13-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட 4 இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கீழடி அருகே உள்ள கொந்தகை கிராமத்தில் கால்நடை மருத்துவமனைக்கு முன்பாக உள்ள கதிரேசன் – சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பழைமையான ஈமக்காட்டில் முதுமக்கள் தாழி, எலும்புகள் கிடைத்தன. ஏற்கெனவே இரண்டு முதுமக்கள் தாழியுடன் கூடிய மனித எலும்பு கூடுகள் மற்றும் தரையில் புதைக்கப்பட்ட நிலையில் 7 மனித எலும்பு கூடுகள் கண்டறியப்பட்டு உள்ளன.
கொந்தகையில் தொடர்ந்து மனித எலும்புக்கூடுடன் கூடிய முதுமக்கள் தாழிகள் கிடைத்து வருகின்றன. இந்நிலையில் முதுமக்கள் தாழி ஒன்றில் மர கைப்பிடியுடன் கூடிய வாள் ஒன்று கிடைத்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாளின் மரக்கைப்பிடி 6 செ.மீ. நீளமும், வாள் 40 செ.மீ. நீளமும் இருக்கின்றன. அருகே இருந்த முதுமக்கள் தாழியில் மனித எலும்புகள், சுடுமண் பாத்திரங்கள் இருந்தன.
இது வாளுடன் புதைக்கப்பட்டவர் ஒரு வீரனாக இருந்திருக்கலாம். அவரின் பெருமை சொல்ல அவ்வாறு புதைக்கப்பட்டுள்ளார் என தொல்லியல் துறையினர் கூறி வருகின்றனர். இந்த வாளை ஆய்வு செய்ய அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பீட்டா அனாலிட்டிகல் ஆய்வகத்துக்கு அனுப்ப உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் தொல்லியல் துறையினர் தகவலை ஆவணப்படுத்தும் போது தான் முழுதகவல் வெளிவரும்” என்றனர்.