பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் கண்காணிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ‘இந்து’ என். ராம் உள்ளிட்ட 9 பேர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, பெகாசஸ் தொடர்பான குற்றச்சாட்டு 2019 ம் ஆண்டே வெளியான நிலையில் மனுதாரர்கள் யாரும் ஏன் காவல்துறையில் புகாரளிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், மனுதாரர்கள் அனைவரும் கற்றுத்தேர்ந்த பத்திரிகையாளர்கள் என்பதால் அவர்கள் வழக்கு தொடுப்பதற்கு முன் காவல் துறையை ஏன் நாடவில்லை என்பது வியப்பாக உள்ளது என்று கூறினார்.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் “பெகாசஸ் எனும் ஒட்டுக்கேட்பு மென்பொருளை விற்பனை செய்யும் என்.எஸ்.ஓ. என்ற இஸ்ரேலிய நிறுவனம், அதிகாரப்பூர்வமான அரசாங்கங்களுக்கு மட்டுமே மென்பொருளுக்கான உரிமையை வழங்குகிறது”

“யார் யாருடைய எண்கள் உளவு பார்க்கப்பட்டது என்ற விவரம் அப்போது வெளியாகவில்லை, தற்போது சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு இது தொடர்பான முழு ஆதாரத்தையும் வெளியிட்டுள்ளதால், மனுதாரர்கள் இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடியுள்ளனர்”

“இந்த ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் மத்திய அரசு சம்பந்தப் பட்டுள்ளதால் நீதிமன்றம் இதுகுறித்து விசாரிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

மேலும், “உச்ச நீதிமன்ற பதிவாளரும், முக்கிய குற்றவாளிகளின் வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர்களின் எண்களும், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரின் பழைய மொபைல் எண்ணையும் கண்காணித்திருப்பதாக” கூறினார்.

இது தொடர்பாக மத்திய அரசுக்கும் நகல் அனுப்ப உத்தரவிட்ட தலைமை நீதிபதி ரமணா இந்த வழக்கு விசாரணையை அடுத்த வாரம் தள்ளிவைத்தார், மேலும், “பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் உண்மையாக இருக்கும் பட்சத்தில், இது அபாயகரமான ஒன்றாக இருக்கும்” என்று கருத்து தெரிவித்தார்.