டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பி.வி.சிந்து இன்று நாடு திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
32 வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் உலக நாடுகளைச் சேர்ந்த 11,000 மேற்பட்ட வீராங்கனைகள், வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்தியாவில் இருந்தும் 100க்கும் மேற்பட்டோர் போட்டிகளில் கலந்துகொள்ள சென்ற நிலையில், ஒருசில போட்டிகளில் மட்டுமே முன்னேறி உள்ளனர். இதுவரை 2 வெண்கலப்பதக்கம் மட்டுமே கிடைத்துள்ளது. அதில் ஒருவர் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து.
சிந்து ஏற்கனவே ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற நிலையில், இந்த வருடம் வெண்கலப்பதக்கம் மட்டுமே பெற முடிந்தது. இந்தியாவுக்கு பெருமை தேடி தந்த சிந்துவுக்கு குடியரசுத்தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், ராகுல்காந்தி உள்பட முக்கிய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் கோடிக்கணக்கான ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.,
இந்த நிலையில் பி.வி. சிந்து. டோக்கியோவிலிருந்து இன்று இந்தியாவுக்குத் திரும்பியுள்ளார். பயிற்சியாளர் பார்க்குடன் வந்திருந்த சிந்துவுக்கு தில்லி விமான நிலையத்தில் மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அவருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனையும்எடுக்கப்பட்டது.
இதுகுறித்து செய்தியளார்களிடம் பேசிய பி.வி.சிந்து, “நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். என்னை ஆதரித்து ஊக்குவித்த பேட்மிண்டன் சங்கம் உட்பட அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். இது ஒரு மகிழ்ச்சியான தருணம்” என்றார்.