சென்னை: 100 நாள் வேலைக்கான தினக்கூலி விரைவில் ₹300 ஆக உயர்த்தப்படும், திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  அவர்கூறியதாவது,.

100 நாள் வேலைத் திட்டத்திற்கு ரூ300 கொடுப்பதற்கான திமுகவின் தேர்தல் வாக்குறுதி  விரைவில் நிறைவேற்றப்படும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. அனைத்து வாக்குறுதிகளையும் முதலமைச்சர் நிறைவேற்றுவார் என்றார்.

மேலும், மாநகராட்சிகளுக்கு அருகே உள்ள ஒரு சில ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைய விருப்பம் தெரிவிக்கின்றன அதுகுறித்தும், அம்மா இருசக்கர வாகன திட்ட செயல்பாடு, நிதி நிலைமையை கருத்தில் கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு செய்வார்.

ஜல் ஜீவன் திட்டத்தில் பணிகள் தரமாக இல்லை என புகார்கள் வந்துள்ளது.  அது குறித்து விசாரிக்கப்படும் என்றவர், கடந்த ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மீது காழ்ப்புணர்ச்சி இல்லை என்றும் விளக்கம் அளித்தார்.

தமிழகத்தில்  ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.