பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர் விட்டாலி ஷிஷாவ் உக்ரைனில் உள்ள க்யிவ் நகரில் நேற்று காணாமல் போனதாகக் கூறப்பட்டது, இந்நிலையில் அவர் வீட்டருகே உள்ள பூங்கா ஒன்றில் இன்று பிணமாக தொங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு பெலாரஸ் நாட்டில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று அதிபராக பொறுப்பேற்றுள்ள அலெக்சாண்டர் லுகாஷென்கோ தேர்தல் நேரத்தில் தனக்கு எதிராகச் செயல்பட்டவர்களை அச்சுறுத்தும் வகையில் எதிச்சதிகார ஆட்சி நடத்தி வருகிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
அதிபரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி அண்டை நாடுகளான, போலந்து, லிதுவேனியா, உக்ரைன் நாடுகளில் பெலாரஸை சேர்ந்த பலர் தஞ்சமடைந்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பெலாரஸ் பத்திரிகையாளர் ஒருவர் சென்ற விமானத்தை நடுவானில் வழிமறித்து மின்ஸ்க் நகரில் தரையிறக்கியதும், தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுத்த தடகள வீராங்கனை போலந்தில் தஞ்சம் அடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது மரணமடைந்த விட்டாலி ஷிஷாவ் உக்ரைன் நாட்டில் உள்ள பெலாரஸ் மக்களின் நல்வாழ்விற்காக சமூக சேவை அமைப்பு ஒன்றை நிறுவி செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், நேற்று காலை வீட்டை விட்டு வெளியில் சென்ற விட்டாலி ஷிஷாவ் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என்று புகைரளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று அவரது வீட்டருகே உள்ள பூங்கா ஒன்றில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தது தெரியவந்தது, உக்ரைன் காவல்துறையினர் இதனை கொலை என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.