சென்னை

பாஜக சார்பில் திருவண்ணாமலை சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட தணிகைவேல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பாஜகவில் திருவண்ணாமலையைச் சேர்ந்த தணிகைவேல் தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பு இணைந்தார்.  அவருக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட வணிக பிரிவு துணை செயலாளர் பதவி வழங்கப்பட்டது.  திரைப்பட ஃபினாசியராகவும் உள்ள இவருக்குத் திருவண்ணாமலை சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு ளிக்கப்பட்டது.

அக்கட்சியைச் சேர்ந்த பலரும் தணிகைவேலுக்கு மக்களிடையே நல்ல அபிப்ராயம் இல்லை எனத் தெரிவித்த போதும் அப்போதைய தமிழக பாஜக தலைவர் முருகன் அதைக் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.    தணிகைவேல் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு அவர் மீது சிபிஐ வழக்கு உள்ளது தெரிய வந்து உளவுத்துறை கேள்விகள் எழுப்பின.   இதையொட்டி வேட்புமனுவைத் திரும்பப் பெற பாஜக தலைமை கூறிய போதிலும் அவர் அதைக் கேட்கவில்லை.

இதையொட்டி பாஜக தலைமை கூட்டணிக் கட்சியான அதிமுக சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டது.  ஆனால் அதிமுக வேட்பாளர் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் தணிகைவேல் வேட்பாளராக தொடர்ந்து வந்தார்.  அவரது தொகுதிக்குக் கட்சி தலைவர்கள் யாரும் பிரசாரத்துக்குச் செல்லவில்லை.  தேர்தலில் இவர் திமுக வேட்பாளர் எ வ வேலிடம் தோல்வி அடைந்தார்.

தற்போது பாஜக மாநிலச் செயலாளர் கரு நாகராஜன், “திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் வணிக பிரிவின் மாநில துணைத் தலைவர் எஸ்.தணிகைவேல் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், தற்பொழுது கட்சியில் எவ்வித செயல்பாடும் இல்லாத காரணத்தினால் மாநில தலைவர் அண்ணாமலை ஒப்புதலுடன் கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது’’ என அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தல் முடிந்தவுடன் தணிகைவேலுவை கட்சியை விட்டு நீக்கினால், பிரச்சினை வெளியில் தெரிந்து விடும் என்பதால் தற்போது கட்சியை விட்டு நீக்கியுள்ளனர் எனக் கூறப்படுகிறது..