பாட்னா: எதிர்க்கட்சியினரிடைய கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள பெகாசஸ் ஸ்பைவர் மூலம் டெலிபோன் டெலிபோன் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரத்தில், பாஜக தலைமைக்கு எதிராக கூட்டணி கட்சியான ஜனதாதளம் எஸ் கட்சி தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். பெகாசஸ் ஸ்பைவேர் குறித்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட எதிர்க்கட்சியினர், நீதிபதிகள், உயர் அதிகாரிகள், மத்தியஅமைச்சர், பத்திரிகையாளர்கள் என 300 பேரின் டெலிபோன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டு உள்ளதாக செய்திகள் பரவின. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வலியுறுத்தியும், இதற்கு பொறுப்பேற்று, உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற இரு அவைகளையும் முடக்கி வருகின்றன.
பெகாசஸ் ஸ்பைவேர் தொடர்பான டெலிபோன் ஒட்டுக்கேட்பு குற்றச்சாட்டுகளை நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மறுத்துள்ளது. இது “இந்திய ஜனநாயகத்தையும் அதன் நன்கு நிறுவப்பட்ட நிறுவனங்களையும் கேவலப்படுத்தும் முயற்சி என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் அல்லது இந்த விவகாரத்தை விசாரிக்க உச்ச நீதிமன்றத்தை நியமிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.
இந்த நிலையில், பாஜகவின் தோழமை கட்சிகளில் ஒன்றான பீகாரில் அரசாங்கத்திற்கு தலைமை வகிக்கும் நிதிஷ் குமார், மத்திய பாஜக அரசின் நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார். பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர்கள் “பல நாட்களாக வலியுறுத்தி வருவதால், அந்த விஷயத்தையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்” என்றார்.
பெகாசஸ் விவகாரம், உண்மையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். நாங்கள் பல நாட்களாக தொலைபேசி ஒட்டுதல் பற்றி கேள்விப்பட்டு வருகிறோம் என்று கூறியவர், இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.