டில்லி
கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதாக இந்தியா மீது மருத்துவ நிபுணர் சந்திராகாந்த் லகாரியா கூறி உள்ளார்.
கொரோனாவுக்கு பிறகு இந்தியாவில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பு குறித்து இந்திய மருத்துவ ஆய்வுக் குழுவான ஐ சி எம் ஆர் சார்பில் ஒரு ஆய்வு நடந்தது. இந்த ஆய்வை சுட்டிக்காட்டி பிரபல மருத்துவ நிபுணர் சந்திரகாந்த் லகாரியா இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை மறைக்கப்படுவதாகக் குற்றம் சாட்டி உள்ளார்.
சந்திரகாந்த் லகாரியா, “ஐசிஎம் ஆர் அளித்துள்ள ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் 67.6% இந்தியர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதாவது 90 முதல் 95 கோடி பேருக்கு கொரோனா நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்துள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் நீங்கலாகப் பெரும்பான்மையானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன் மூலமாகவே நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்திருக்கலாம். இந்த ஆய்வு அடிப்படையில் பார்த்தால் இந்தியாவில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு எனக் கணக்கு தெரிவித்தால் 30 பேருக்குத் தொற்று இருப்பது தெரியாமல் போயிருக்கும் அல்லது கணக்கில் காட்டப்படாமல் போயிருக்கும்.
அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 99 பேருக்கு கொரோனா ஏற்பட்டால் ஒருவர் மட்டுமே கணக்கில் சேர்க்கப்பட்டு 98 பேரின் தொற்று மறைக்கப்பட்டுள்ளது, குறைந்தபட்சமாகக் கேரளாவில் 1-க்கு 6 என்ற கணக்கில் கொரோனா தொற்று கணக்கில் சேர்க்கப்படாமல் விடுபட்டுள்ளது.
உ பியைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம் 1-க்கு 83, ஜார்கண்டில் 1-க்கு 63 என்ற கணக்கிலும் கொரோனா தொற்று மறைக்கப்பட்டுள்ளதாகவும், ராஜஸ்தானில் 1-க்கு 62, குஜராத் – 1-க்கு 61 என்ற கணக்கிலும் கொரோனா தொற்று விடுபட்டிருக்கலாம் அல்லது மறைக்கப்பட்டிருக்கலாம் ” எனத் தெரிவித்துள்ளார்.