டோக்கியோ:
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் தங்கம் வெல்வதே இலக்கு என்று இந்திய பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு தெரிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், கடந்த 23 ஆம் தேதி கோலாகலமான துவக்க விழாவுடன் தொடங்கிய நிலையில், கடந்த 24ஆம் தேதி மகளிருக்கான 49 கிலோ எடைப்பிரிவு பளு தூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் சீனாவைச் சேர்ந்த ஜிஹுய் ஹூ தங்கம் வென்றார்.

இப்போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு, வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார். ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற முதல் இந்திய பளுதூக்கும் வீரர் என்ற பெரும் சாதனையை அவர் நிகழ்த்தினார்.

இதையடுத்து, மணிப்பூர் மாநில முதல்வர், மீராபாய் சானுவிற்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், மீராபாய் சானுவை, (விளையாட்டு பிரிவில்) கூடுதல் காவல்துறை சூப்பரிண்டண்டாக மணிப்பூர் மாநில அரசு நியமித்துள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய இந்திய பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, டோக்கியோ ஒம்பிகில் வெள்ளி பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும் தங்கப் பதக்கம் வெல்வதே என்பது லட்சியம். அதற்காக தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.