சென்னை: தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தொடங்கிய நிலையில், வாக்காளர் பட்டியல் தயார் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் புதியதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தலைமைச்செயலகத்தில் நேற்று நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கூட்டத்தில், மாநில நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், துறை சார்ந்த உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் முதல்கட்டமாக எஞ்சிய 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்துவது எனவும், இந்தாண்டு இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாகவும் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மாநில தேர்தல் ஆணையம்,தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தொடங்கியதற்கான அடையாளமாக, வாக்காளர் பட்டியல் தயார் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.