டெல்லி: டெல்லியில் முகாமிட்டுள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இன்று  அகில இந்திய காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்து பேசினார்.

பாஜகவுக்கு எதிரான மனநிலையில் உள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து வரும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 2024ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும் என கூறி அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்தநிலையில், தற்போது எதிர்க்கட்சிகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள பெகாசஸ் டெலிபோன் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்தும்,  மோடி அரசை கடுமையாக விமர்சித்து வந்த மம்தா பானர்ஜி நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, அனைத்துக்கட்சி  விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியதாக செய்தியளார்களிடம் கூறினார்.

தொடர்ந்து, டெல்லியில் மத்தியப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கமல்நாத், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த் சர்மாவை சந்தித்தும் மம்தா ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை செய்தார். இந்த சந்திப்பு தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மம்தா,  சோனியா காந்தியும் எதிர்க்கட்சியின் ஒற்றுமையை விரும்புகிறார். காங்கிரஸ் பிராந்தியக் கட்சிகளையும், பிராந்தியக் கட்சிகளையும் நம்புகிறது என்று கூறினார்.