டெல்லி: ஆகஸ்டு மாதத்தில் குழந்தைகள், சிறுவர்களுக்கு தடுப்பூசி போட வாய்ப்பு உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்
கொரோனா தொற்றில் இருந்து ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி ஒன்றே தீர்வு என சுகாதாரத்துறை வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர். இதையடுதுது இந்தியா உள்பட உலக நாடுகளில் தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்துள்ளது. நமது நாட்டில், தற்போதைய நிலையில், பாரத் பயோ டெக் நிறுவனத்தின், கோவாக்சின் தடுப்பூசியும், பிரிட்டனின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்து, சீரம் இந்தியா நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியும், பொது மக்களுக்கு தற்போது போடப்பட்டு வருகின்றன. ஒருசில தனியார் மருத்துவமனைகளில், ரஷ்ய நாட்டின் ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
ஜனவரி 16 முதல் இந்தியாவில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.,முதல்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கும், பின்னர் 60வயதுக்கு மேற்பட்டோருக்கும், தொடர்ந்து 45 வயதுக்கு மேற்பட்டோர் என அடுத்தடுத்த கட்டங்களாக தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில், தற்போது 18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை நாடு முழுவதும் 44 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா 3வது அலையில் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், குழந்தைகளுக்கான தடுப்பூசி சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெளிநாடுகளில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தொடங்கி உள்ளன. இந்தியாவில், பாரத் பயோ டெக் நிறுவனம், கோவாக்சின் தடுப்பூசியை குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் மீது பரிசோதனை செய்து வருகிறது. இந்நிறுவனம் இரண்டு கட்ட பரிசோதனைகளை நடத்தி முடித்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், ஜைடஸ் காடில்லா என்ற மருந்து தயாரிப்பு நிறுவனமும், சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற பா.ஜ.க., எம்.பி.,க்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களை எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் நட்புறவுடன் நடந்துகொள்ளும்படி வலியுறுத்தினார். மேலும், கொரோனா தடுப்பு பணியில் அனைவரும் களமிறங்கி சிறப்பாக பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தியதுடன், குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி இன்னும் சில நாட்களில் கிடைக்கும் எனத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, அடுத்த மாதம் (ஆகஸ்டு) குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.
செப்டம்பர் மாத தொடக்கத்தில், நாட்டில், குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட வாய்ப்புள்ளதாக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா சமீபத்தில் தெரிவித்திருந்த நிலையில், மத்திய அமைச்சர் ஆகஸ்டில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.