1991 ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் இந்திய பொருளாதார வளர்ச்சிக்காக தாராளமயமாக்கப்படும் என்று வாக்குறுதியளித்தார் காங்கிரஸ் தலைவர் ராஜிவ் காந்தி.

தேர்தல் பிரசாரத்தில் படுகொலை செய்யப்பட்ட ராஜிவ் காந்தியின் கனவை நிறைவேற்றும் பெரும்சுமை பிரதமாரகப் பொறுப்பேற்றுக் கொண்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.வி. நரசிம்மராவின் தோள்களில் விழுந்தது.

அவரது அமைச்சரவையில் நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற மன்மோகன் சிங் அவருக்கு தோளோடு தோள் கொடுத்தார்.

வளைகுடா போர் காரணமாக புலம்பெயர் தொழிலாளர்களின் வங்கி வைப்புத்தொகை குறைந்ததால் அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்த நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக ரிசர்வ் வங்கியில் இருந்த கையிருப்பு தங்கம் அனைத்தும் முந்தைய ஆட்சியாளர்களால் அடமானம் வைக்கப்பட்ட சூழலில் வளர்ச்சிப் பாதைக்கான தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய சீர்திருத்த பட்ஜெட்டை முன்னெடுத்தார் மன்மோகன் சிங்.

கச்சா எண்ணெய் விலை வளைகுடா போர் காரணமாக விண்ணை தொட்டுக்கொண்டிருக்க, அந்நிய செலாவணி கையிருப்போ ஓரிரு வார இறக்குமதிக்கு மட்டுமே போதுமான அளவு இருந்த நேரத்தில் இப்படி ஒரு சீர்திருத்தத்தை மனோதைரியமும் துணிச்சலும் உள்ளவர்களால் மட்டுமே எடுக்க முடியும்.

நிதியமைச்சராக தனது முதலாவது பட்ஜெட்டை 24 ஜீலை 1991 ம் ஆண்டு தாக்கல் செய்த மன்மோகன் சிங் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளையும் மீறி இந்திய பொருளாதார வளர்ச்சிக்காக பட்ஜெட்டில் சொன்னவற்றை நிறைவேற்றினார்.

உரிமம், ஒதுக்கீடு மற்றும் அனுமதி ஆகியவற்றில் தொழில்துறையினர் சந்தித்துவந்த சவால்களை போக்க கொண்டுவந்த சீர்திருத்தங்கள் மூலம், தொழில் வளர்ச்சி கண்டது இந்தியா.

இந்திய நிறுவனங்களில் நேரடி அந்நிய முதலீட்டை 51 சதவீதமாக அதிகரித்ததன் மூலம், அந்நிய முதலீடுகள் பெருமளவில் வரத்தொடங்கியது.

இதன் காரணமாக கடந்த முப்பதாண்டுகளில் உலகளவில் இந்திய பொருளாதாரத்தின் பங்கு இருமடங்கு உயர்ந்திருக்கிறது. ஜி.டி.பி. பத்துமடங்கு அதிகரித்துள்ளதோடு, சராசரி தனிமனித வருமானம் 14,300 ரூபாயில் இருந்து 86,700 ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும், தற்போது 18 மாதங்கள் இறக்குமதிக்குத் தேவையான ரூ. 45 லட்சம் கோடி அந்நிய செலாவணி கையிருப்பு உள்ளது.

நாடு முழுவதும் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகள் அதிகரித்துள்ள நிலையில், இந்திய தொழில் துறை சர்வதேச தரத்திற்கு முன்னேறியிருக்கிறது. இந்திய தயாரிப்புகள் உலகளவில் சிறந்த தரம் வாய்ந்ததாக அங்கீகாரம் பெற்றுள்ளது.

உலகமே பொறாமைப்பட கூடிய அளவுக்கு 120 கோடி மொபைல் போன் சந்தாதாரர்களோடு இந்திய தொலைத்தொடர்புத் துறை வளர்ச்சி பெற்றிருப்பதோடு, விமான போக்குவரத்து அனைவருக்கும் சாத்தியமான ஒன்றாகவும், இந்தியா முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.

தாராளமயமாக்கல் கொள்கை பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு சோதனைகளை சந்தித்த போதும் அதனால் ஏற்பட்டிருக்கக்கூடிய பலன்கள் இதுபோன்ற தொலைநோக்குப் பார்வையோடு மனவுறுதியோடும் தைரியத்தோடும் மக்களின் முன்னேற்றத்திற்க்காக சிந்திக்கும் தலைமை வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

உலகளவில் 21 ம் நூற்றாண்டின் தலைசிறந்த நாடாக இந்தியா திகழ்வதற்கு மன்மோகன் சிங் 30 ஆண்டுகளுக்கு முன் விதைத்த கொள்கைகளே முக்கிய காரணமாக உள்ளது, தற்போதுள்ள சூழ்நிலையில் இந்த வளர்ச்சி மேலும் தொடர ஆற்றல் மிக்க செயல்பாடுகள் அதிகரிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நன்றி : டெக்கான் ஹெரால்ட்