டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில், துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் மற்றும் அபுர்வி சந்தேலா ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாத நிலையில் உள்ளனர். இதனால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஜப்பான் தலைநகர் டோக்யோவில் கொரோனா அச்சுறுத்தலக்கு இடையே ஒலிம்பிக் தொடர் தொடங்கி உள்ளது. திட்டமிட்டபடி நேற்று (ஜூலை 23) மாலை 4.30 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் ஒலிம்பிக் திருவிழா தொடங்கியது. இந்த போட்டிகள் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 8ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளில் இந்தியா சார்பில், 100க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொள்ள அங்கு சென்றுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 12 வீரர்கள் அடங்குவர்.
துப்பாக்கி சுடுதல் போட்டியில், மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச் சுற்று போட்டிகள் இன்று காலை 5 மணிக்கு தொடங்கின. இதில் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவனும், தங்கப்பதக்கம் வெல்ல அதிகபட்ச வாய்ப்புள்ளவராக கருதப்பட்ட சந்தெல்லா அபுர்வி ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பிரிவில் உலக சாதனை புரிந்த அபுர்வி 621.9 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளார். இளவேனில் வாலறிவன் 626.5 புள்ளிகள் எடுத்திருந்தார். இதன் காரணமாக இதில் கலந்து இந்தியாவைச் சேர்ந்த இரு வீராங்கனைகளுமே இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை. இது இந்தியாவுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.