2017 ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் ராகேஷ் அஸ்தானா, அவருக்கு அடுத்தபடியாக சி.பி.ஐ. இயக்குனர் பொறுப்பேற்ற அலோக் வர்மா மற்றும் முன்னாள் சி.பி.ஐ. இணை இயக்குனர் ஏ.கே. சர்மா ஆகியோரின் தொலைபேசி எண்கள் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் இடம்பெற்றுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய வகையில் ராகேஷ் அஸ்தானா பதவியில் இருந்து இரவோடு இரவாக நீக்கப்பட்டதும், அதைத் தொடர்ந்து புதிய இயக்குனராக அலோக் வர்மா பதவியேற்றதும் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டதுடன், இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது.

இந்த பதவி நீக்க சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் ராகேஷ் அஸ்தானாவின் மூன்று மொபைல் எண்கள் மற்றும் அவரது மனைவி, மகள், மருமகன் என அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் மொத்தம் எட்டு எண்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளது.
இது தவிர அலோக் வர்மா மற்றும் ஏ.கே. சர்மா ஆகியோரின் எண்களும் அவரது குடும்ப உறுப்பினர்களின் எண்களும் கண்காணிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரிகளான ராகேஷ் அஸ்தானா மற்றும் ஏ.கே. சர்மா ஆகியோர் இடையே அவர்கள் குஜராத்தில் பணியில் இருந்த காலம் தொட்டே பனிப்போர் நிலவிவந்தது, மோடிக்கு நெருக்கமானவராக அஸ்தானா அறியப்பட்ட நிலையில், ஏ.கே. சர்மா, அமித் ஷா வின் விசுவாசியாக இருந்தார்.
சி.பி.ஐ. அதிகாரிகளாக இருந்தவர்களின் தொலைபேசி எண்களும் வேவு பார்க்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி பா.ஜ.க. தலைமைக்கு விசுவாசமாக உள்ளவர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.