டில்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, டில்லி, ஜந்தர் மந்தர் பகுதியில், விவசாயிகள் இன்று முதல் தொடர் போராட்டம் நடத்த டில்லி மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை, திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லி எல்லையில் 6 மாதங்களை கடந்தும் போராட்டம் தொடர்ந்து வருகிறது. தற்போது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெறுவதால், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த மாநில அரசிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், இன்றுமுதல் ஜந்தர்மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு நிபந்தனைகளுடன் டெல்லி போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
டில்லி அரசின் பேரிடர் மேலாண்மை ஆணையம், ஜந்தர் மந்தர் பகுதியில், விவசாயிகள் போராட்டம் நடத்த அனுமதி வழங்கிஉள்ளது.கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து, தினமும், 11:00 மணியிலிருந்து, 5:00 மணி வரை, 200 பேருக்கு மிகாமல் பங்கேற்கலாம் என, நிபந்தனை விதித்துள்ளது.
இது குறித்து, பாரதிய கிசான் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் கூறுகையில், ”சிங்கு எல்லையில் இருந்து, தினமும் பேருந்துகளில் 200 பேர், ஜந்தர் மந்தர் வந்து அமைதியாக போராட்டத்தில் பங்கேற்பர்,” என்று தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் போராட்டத்தையொட்டி, ஜந்தர்மந்தர் பகுதி, நாடாளுமன்ற வளாகங்களைச் சுற்றி காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.