புதுடெல்லி:
கொரோனா 2-வது அலையின்போது, ஆக்சிஜன் ஏற்றுமதியை 70 சதவீதம் மத்திய அரசு அதிகரித்தது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா குற்றம் சாட்டினார்.

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார் ராஜ்யசபாவில் நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ‛‛ஆக்சிஜன் பற்றாக்குறையால் கோவிட் 2-வது அலையால் யாரும் இறக்கவில்லை என்று மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் அளித்த அறிக்கையிலிருந்து தெரியவருகிறது,” எனத் தெரிவித்திருந்தார். பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நிலையில் மத்திய அமைச்சர் பேசியதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா இன்று டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது:

ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை’ என, மத்திய அரசு கூறுகிறது. ஆனால், கோவிட் 2-வது அலையில் உயிரிழப்புகள் நடந்தன. அப்போது, ஆக்சிஜன் ஏற்றுமதியை 70 சதவீதம் மத்திய அரசு அதிகரித்தது. 2-வது அலையின்போது, ஆக்சிஜன் வழங்குவதற்குப் போதுமான சிலிண்டர்கள் மத்திய அரசிடம் இல்லாததால், கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்கள் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்தனர். பார்லிமென்ட் குழுவின் அறிவுரைகள் புறக்கணிக்கப்பட்டன. ஆக்சிஜன் சப்ளைக்கு எந்தவிதமான ஏற்பாடுகளும் செய்யவில்லை. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தயாரிப்பு மையம் அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவ்வாறு பிரியங்கா தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.