மும்பை
மகாராஷ்டிரா, தெலுங்கான உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது பல மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, பஞ்சாப், டெல்லி, உத்தராகாண்ட், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் மழை காரணமாகச் செவ்வாய்க்கிழமை 6 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், மகாராஷ்டிர தலைநகர் மும்பையின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது. காலை முதலே வடாலா, சியோன் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதனால் செம்பூர் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கி வாகனங்கள் நீரில் மிதந்தபடி சென்றன. மும்பை மெரைன் டிரைவ் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
செவ்வாய்க்கிழமையில் இருந்து தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. நகரில் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் கரைபுரண்டு கடைகளுக்குள் தண்ணீர் புகுந்ததாகவும், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் மக்கள் வேதனை தெரிவித்தனர்.
மேலும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீநகரில் கனமழை பெய்தது. உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த திங்கட்கிழமை பெய்த கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. 4 பேரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது.