லக்னோ: இந்தியாவைச் சேர்ந்த முக்கிய நபர்களின் செல்போன் மற்றும் சமூக வலைதளங்களை ஹேக் செய்து, உளவு பார்த்தது ஐனநாயக குற்றம் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவரம், முன்னாள் உ.பி. முதல்வருமான அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டி உள்ளார்.
இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ எனும் நிறுவனத்தின் பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் இந்தியாவைச் சேர்ந்த 40 பத்திரிக்கையாளர்கள் உட்பட உலகெங்கும் உள்ள 200 பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களின் தரவுகள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது.
மேலும், பிரபல ஊடகங்களான இந்துஸ்தான் டைம்ஸ், இந்தியா டுடே, நெட்வர்க் 18, தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற செய்தி நிறுவனங்களின் பணியாற்றும் முன்னணி பத்திரிகையாளர்கள் கண்காணிக்கப்பட்டுள்ளதாகவும், ஏஃப்பி, சிஎன்என், தி நியூயார்க் டைம்ஸ், அல் ஜசீரா உள்ளிட்ட பல சர்வதேச செய்தி நிறுவனங்களின் பணியாற்றும் பத்திரிகையாளர்களின் செல்போன்களும் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள் தவிர, மூன்று எதிர்க்கட்சி தலைவர்கள், பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இரண்டு அமைச்சர்கள் மற்றும் பல தொழிலதிபர்களின் செல்போன் ஒட்டுக்கேட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை, பிரான்ஸை சேர்ந்த ‘பார்பிடன் ஸ்டோரீஸ்’ என்ற ஊடக நிறுவனத்துடன் இந்தியாவைச் சேர்ந்த ‘த வயர்’ மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட், தி கார்டியன் உள்ளிட்ட 17 ஊடக நிறுவனங்கள், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து ஆய்வு மேற்கொண்டு வெளிப்படுத்தி உள்ளன.
இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்திடம் வேவு பார்ப்பதற்காக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன் எண்கள் இருந்ததும் தெரிய வந்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை இந்தியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மெக்ஸிகோ, பஹ்ரைன், ஹங்கேரி, மொராக்கோ, ருவாண்டா, அஜர்பைஜான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்தது.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள இந்திய அரசு, தற்போது எழுந்துள்ள குற்றசாட்டு அரசின் நிறுவனங்களை களங்கப்படுத்தும் நோக்கில் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சமாஜ்வாதி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ், , ‘தொலைபேசியில் உளவு பார்ப்பதன் மூலம் மக்களின் தனிப்பட்ட பேச்சைக் கேட்பது ‘தனியுரிமைக்கான உரிமையை’ முற்றிலும் மீறுவதாகும். பாஜக இந்த வேலையைச் செய்து வருகிறதென்றால் அது தண்டனைக்குரியது, அது தெரியாது என்று பாஜக அரசு சொன்னால் அது தேசிய பாதுகாப்பு மீதான தோல்வி. தொலைபேசி உளவு ஒரு ஜனநாயக குற்றம் என பதிவிட்டுள்ளார்.