கடந்த 2014-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், ‘பிசாசு.’ படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிறது.
பிசாசு படத்தின் முதல் பாகத்திற்கும், இரண்டாம் பாகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் இது மாறுபட்ட கதை என்றும் சமீபத்திய பேட்டியில் இயக்குனர் மிஷ்கின் கூறியிருந்தார்.
பிசாசு 2 படத்தை ராக்போர்ட் என்டர்டெயின்மெண்ட் முருகானந்தம் தயாரிக்க, கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். மிஷ்கின் படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைப்பது இது முதல்முறையாகும்.
இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டது . அவர் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் விஜய் சேதுபதி ‘பிசாசு 2’ படத்தில் பேய் ஓட்டும் நபராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த டிசம்பரில் பிசாசு 2 படப்பிடிப்பு தொடங்கியது. பிறகு கொரோனா மற்றும் ஊரடங்கால் படப்பிடிப்பு தடைபட்டது. தற்போது மீண்டும் படப்பிடிப்பை மிஷ்கின் தொடங்கியுள்ளார். இதில் புதிதாக இளம் நடிகை நமிதா கிருஷ்ணமூர்த்தி இணைந்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த தமன்னாவின் நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸில் நமிதா கிருஷ்மூர்த்தி நடித்திருந்தார். அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.