பாரிஸ்
ஐரோப்பாவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல் 5 மடங்கு அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் பிரான்சில் தடுப்பூசி போடுவது கட்டாயம் ஆகி உள்ளது.
கடந்த 1½ ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா தொற்று பரவல் முதல் 6 மாதங்களுக்குப் பிறகு குறையத் தொடங்கியது. ஆயினும் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது.
இதையொட்டி பல்வேறு நாடுகளில் கொரோனா 2-ம் அலை ஏற்பட்டது. அதில் இந்தியாவில் பரவும் உருமாறிய கொரோனாவுக்கு டெல்டா என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை டெல்டா வகை வைரஸ் 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. இந்த டெல்டா வகை வரைஸ் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று இங்கிலாந்தில் 51 ஆயிரம் பேரும், ஸ்பெயினில் 31 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான நாடுகளில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த பரவலுக்கு டெல்டா வகை வைரஸ் தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்டா வகை வைரஸ் பரவல் காரணமாக ஐரோப்பியாவில் ஆகஸ்டு 1-தேதிக்குள் கொரோனா பாதிப்பு 5 மடங்கு உயரும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் நோய்த் தடுப்பு ஏஜென்சி தெரிவித்துள்ளது.
இதையொட்டி ஐரோப்பிய நாடுகளில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. பிரான்ஸ் நாட்டு அதிபர் மாக்ரோன் அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கி உள்ளார். மேலும் தடுப்பூசி அல்லது கொரோனா நெகடிவ் சான்றிதழ் உள்ளோர் மட்டுமே உணவகங்கள், திரையரங்குகள், மால்கள் ஆகியவற்றுக்குள் செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.