புதுடெல்லி:
 காங்கிரஸ் பாராளுமன்ற குழுவின் தலைவராக  அதேரஞ்சன் சவுத்ரி தொடருவார் என்று  காங்கிரஸ் தலைவர்  சோனியா அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்  நாளை தொடங்க உள்ள நிலையில்,  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,  கட்சியின் பாராளுமன்ற குழுக்களை மறுசீரமைத்துள்ளார்.
காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியின் தலைவராகச் சோனியா காந்தி கடந்த ஜூலை 15 ம் தேதி வெளியிட்ட கடிதத்தில்,  “பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் எங்கள் கட்சியின் திறமையான செயல்பாட்டை எளிதாக்குவதற்கும்,  உறுதி செய்வதற்கும்,  பின்வரும் குழுக்களை மறுசீரமைக்க முடிவு செய்துள்ளேன்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
மக்களவையில், குழுவில் ஆதீர் ரஞ்சன் சவுத்ரி,  கவுரவ் கோகோய், மணீஷ் திவாரி, கே.சுரேஷ், மாணிக்கம் தாகூர், சஷி தரூர் மற்றும் ரவ்னீத் பிட்டு ஆகியோர் உள்ளனர்.
மாநிலங்களவையில், மல்லிகார்ஜுன் கார்கே, ஆனந்த் சர்மா, ஜெய்ராம் ரமேஷ், அம்பிகா சோனி, திக்விஜயா சிங், பி.சிதம்பரம் மற்றும் கே.சி. வேணுகோபால் ஆகியோர் உள்ளனர். இந்த குழுவுக்கு கே.சி. வேணுகோபால் தலைமை தாங்குவார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் அந்த கடிதத்தில்,  அவர்கள் அமர்வின் போது தவறாமல் சந்திப்பார்கள், பின்னர் தேவைப்படும் போதெல்லாம், கூட்டுக் கூட்டங்களைக் கூட்டுவதற்கு கார்கேவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
நாளை தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில்  பணவீக்கம், எரிபொருள் விலை உயர்வு, கொரோனா தவறான மேலாண்மை மற்றும் சீனாவுடனான எல்லை பிரச்சினை போன்ற பிரச்சினைகளை எழுப்பக் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.