சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வளிமண்டல சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, சேலம், தருமபுரி, நாமக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இன்றும், நாளையும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் என்றும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மற்றும் ஒரு சில உள்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக வால்பாறை, சின்னக்கல்லார், பந்தலூரில் தலா 9 செ.மீ மழை பதிவானது. 3 நாட்களுக்கு கேரளா, கர்நாடகாவை ஒட்டியுள்ள அரபிக்கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.