சென்னை: இயற்கையை அழித்து எந்த வளர்ச்சித்திட்டங்களையும் மேற்கொள்ளக் கூடாது என சென்னை உயர்நீதி மன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது.

பழைய மாமல்லபுரம் சாலை விரிவாக்கம்  செய்வதற்காக, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏரியை ஆக்கிரமிப்பு செய்யும் அரசின் நடவடிக்கையை எதிர்த்து, ஸ்ரீதர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில்,  பழைய மாமல்லபுரம் சாலை இரண்டாவது திட்டத்திற்காக தமிழ்நாடு சாலை மேம்பாட்டு கழகம், செங்கல்பட்டு மாவட்டம் படூர் கிராமத்தில் உள்ள கல்லேரி என்னும் ஏரியை ஆக்கிரமித்துள்ளதாகவும், இதனை அகற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த வழக்கு, இன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,  ஆஜரான  மனுதாரர்  வழக்கறிஞர், இந்த ஆக்கிரமிப்பு குறித்து விசாரணை நடத்த வட்டாசியருக்கு வருவாய்துறை அலுவலர் உத்தரவிட்டுள்ளதாகவும், வருவாய்துறை அலுலவர் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் வாதிட்டார்.

இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள்,  மாநில அரசு நீர் நிலையில் ஆக்கிரமிக்க கூடாது என்றும், அந்த பகுதியில் மேல்நிலை சாலை அமைக்கலாம் என்று அறிவுறுத்தியதுடன், இயற்கையை அழித்து எந்தவொரு வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள கூடாது. இந்த வழக்கு தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.