மீள்பதிவு:

ஜூலை 15, இன்று கர்மவீரர் காமராஜர் 119வது பிறந்தநாள்… உலகம் போற்றும் உன்னத தலைவரின் பிறந்த நாள்… 

தமிழகத்தில் ஜாதிமதமற்ற சமுதாயத்தை உருவாக்க, குலக்கல்வியை முறையை ஒழித்து, அனைவரும் கல்வி கற்க ஏதுவாக முதன்முதலாக பள்ளிக்குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தை கொண்டுத்து, மக்கள் பணியாற்றிய பெருந்தலைவர் காமராஜரின் 119வது பிறந்த நாள் இன்று.

பெருந்தலைவர்,  கர்ம வீரர் என அன்போடு அழைக்கப்படும் காமராஜர் , 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் நாள், விருதுநகர் மாவட்டத்தில் குமாரசாமி நாடாருக்கும் சிவகாமியம்மாவுக்கும் மகனாக பிறந்தார். இவருடைய இயற்பெயர் ‘காமாக்ஷி’. அவருடைய தாயார் மிகுந்த நேசத்துடன், அவரை “ராஜா” என்று அழைப்பார். அதுவே, பின்னர் (காமாக்ஷி + ராஜா) ‘காமராஜர்’ என்று பெயர் வரக் காரணமாகவும் அமைந்தது.

இவர் முதல்வர் பொறுப்பை ஏற்றதும், ஏற்கெனவே ராஜாஜி கொண்டு வந்திருந்த குலக்கல்வித் திட்டத்தினைக் கைவிட்டார்.  காமராசர் ஆட்சிக் காலத்திற்குள் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்த்தப்பட்டது. பட்டி தொட்டி எங்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது,

பள்ளிகளுக்கு ஏழை மாணவர்கள் படிக்க முன்வராததை கண்ட காமராஜர்,  1920ம் ஆண்டு  நீதிக்கட்சி அரசு ஆதரவுடன் சென்னை மாநகராட்சியில் மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார்.

முதன்முதலா  ஆயிரம் விளக்குப் பகுதியில் இருந்த ஒரு மாநகராட்சிப் பள்ளியில் காலை உணவுத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின் மேலும் நான்கு பள்ளிகளுக்கு விரிவு படுத்தப்பட்டது. இத்திட்டத்தை விரிவு படுத்தினார் காமராசர். அதன் பலனாகப் பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 விழுக்காடாக உயர்ந்தது. பள்ளிகளில் வேலைநாட்கள் 180 இல் இருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது.

மூன்று முறை தமிழக முதலமைச்சராக தேர்தெடுக்கப்பட்ட காமராஜர் அவர்கள், பதவியை விட தேசப்பணியும், கட்சிப்பணியுமே முக்கியம் என கருதியவர். இந்தியாவின் மதிக்கத்தக்க இரண்டு பிரதம மந்திரிகளை உருவாக்கி, இந்தியாவின் ‘கிங்மேக்கராகப்’ போற்றப்படுபவர் காமராஜர்.

அவரின் தன்னலமற்ற தொண்டிற்காக, இந்திய அரசு, அவரின் மறைவிற்கு பின்னர் 1976 ஆம் ஆண்டு “பாரத ரத்னா” விருதினை வழங்கியது.

தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படும் ‘பெருந்தலைவர் காமராஜர்’ தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சி செய்தார்.  இவருடைய ஆட்சி காலமே தமிழகத்தின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது.

உழைப்பால், மக்கள் பணியால்,  படிப்படியாக உயர்ந்த  காமராஜர், ‘பெரும் தலைவர்’, ‘தென்னாட்டு காந்தி’, ‘படிக்காத மேதை’, ‘கர்ம வீரர்’, ‘கல்விக்கண் திறந்த காமராஜர்’ என பல்வேறு சிறப்பு பெயர்களால் பொதுமக்களால் அன்போடு அழைக்கப்பட்டார்.

தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற முதல் நாளில் கோப்புக்களை பார்க்க  தனது ஆசனத்தில் அமர்ந்திருந்த காமராஜர். தனக்கு முன்னாள் இருந்த மேஜைமீது, இரண்டு வரிசையில் கோப்புகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டு மலைத்துப்போனார்.

‘ இது என்ன வரிசை?’ என உதவியாளரிடம் கேட்க, ‘முதல் வரிசையில் உள்ளவை முக்கிய மானவை என்றும், இரண்டாவது வரிசையில் உள்ளவை முக்கியம் இல்லாதவை’ என்று பதில் அளித்தார்.

இதைக்கேட்டதும், அதிர்ந்து போன காமராஜர்  ‘முதல்வருக்கு வரும் கோப்புகளில் முக்கியம் இல்லாதவையும் உண்டா என்ன?’ எனக்கு வரும் ஒவ்வொரு கோப்பும் முக்கியமானதுதான். அவற்றை நான் உடனுக் குடன் பார்த்து அனுப்ப வேண்டும் அதுதான் முக்கியம் என்று கூறி கோப்புகளை கடகடவென பார்க்க தொடங்கினார்.

தன்னை பார்க்க அரசுத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் போன்றோர் வரும்போது, தன் உதவியாளர்களை அழைத்து, தெருவில் போகிற சாதாரண வாழ்க்கை நடத்தும் ஏழைகளைக் கூப்பிடச் சொல்லி, அதிகாரிகள் முன்பே அவர்களின் நிறை குறைகளை  கேட்பார். இதன் காரணமாக, அவர்களின் குறைகளை தான் மட்டும் கேட்டால் போதாது, அதிகாரிகளும் கேட்க வேண்டும் எனற நோக்கில் அவ்வாறு செயல்பட்டதாக கூறப்படுகிறது.

பெருந்தலைவர் காமராஜர் தமிழக முதலமைச்சராக இருந்தபோது கும்பகோணம் அருகே ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்தார். அப்போது, ஆசிரியர்களுக்கு மதிய உணவு எடுத்து வந்த மூதாட்டி, காமராஜரை காண ஆவலோடு நின்றுகொண்டிருந்தார். அவரது கண்கள் காமராஜர் தன்னை பார்ப்பாரா என  அலைபாயந்துகொண்டிருந்தது. ஆனால், காவல்துறையினரும். கட்சி பிரமுகர்களும் அந்த முதாட்டியை பிடித்துக் தள்ளி ஓரங்கட்டிவிடப் பார்த்தனர்.

இதனால் கோபமடைந்த அந்த மூதாட்டி, “நான் ஐயாகிட்ட ஒண்ணு கேக்கணும்” என்று கத்தினார் , இதை கேட்ட காமராஜர், அந்த அம்மாவை தன்னிடம் அழைத்து வர பணித்து, “வாங்கம்மா என்ன கேக்கப் போறீங்கன்னேன்” என்று அன்போடு வினவினார்.

காமராஜருடன் வாழப்பாடி ராமமூர்த்தி

அப்போது, அந்த மூதாட்டி காமராஜரின் கைகளை பிடித்துக்கொண்டு, “ஐயா என்ன மாதிரி ஆதரவு இல்லாத எத்தனையோ கெழம் கட்டைங்க இப்படி சாப்பாடு கூடை தூக்கி பொழைக்கிறோம். இது நிச்சயமில்லாத வருமானமய்யா…! கை காலு விழுந்துச்சுன்னா எங்கள யாரு காப்பாத்துவா..! ” என்று கண்ணீரோடு கேள்வி எழுப்பினார்.

இதை கண்ட அருகில் இருந்த அரசியல் பிரமுகர் ஒருவர், மூதாட்டி பண உதவி எதிர்பார்ப்பதாக நினைத்து, அவரிடம் இருபது ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தார். ஆனால், அதை வாங்க மறுத்த மூதாட்டி,  “இது யாருக்கையா வேணும் இன்னிக்கு நீங்க இதக் கொடுத்துப்புட்டுப் போயிடுவீங்க..இது நிரந்தரமா எங்க பசிய ஆத்திப்புடுமா? எங்கள் மாதிரி வயசானவங்களுக்கு காமராஜ் ஐயா நெனச்சா நிரந்தரமா ஏதாவது செய்ய முடியும்” என்றபடி அந்தப் பணத்தை வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டார், அதையடுத்து  “ஆகட்டும்..பார்க்கலாம்!” என்று அந்த மூதாட்டியிடம் கூறிய விட்டு அங்கிருந்து  நகர்ந்தார் காமராஜ்.

தொடர்ந்து நிகழ்ச்சி முடிந்தவுடன்  காரில் ஏறிய காமராஜர், ” இந்த மாதிரி ஆதவில்லாத ஒண்டிக் கட்டைகளுக்கு மாசம் எவ்வளவு செலவு ஆகும்..?” என்றுஅதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். அவர்கள் மாதம் இருபது ரூபா ஆகும் என்று கூறினார். இதைத்தொடர்ந்து, ஆதரவற்ற முதியோர்கள் குறித்த புள்ளி விவரங்களை எடுக்க முதல்வர் காமராஜர், ஒருசில நாட்களில்,  “முதியோர் பென்சன் திட்டம்” அறிவித்து, ஆதரவற்ற முதியோர்களுக்கு மாதம் தோறும் இருபது ரூபாய் அளித்து, ஏழை முதியோர்களின் வாழ்வில் ஒளியேற்றினார்.

காமராசர் முதலமைச்சராகப் பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார்.

இன்று தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நீர் திட்டங்கள் அனைத்தும் காமராஜர் ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. அவரது ஆட்சியின் கீழ் 9 முக்கிய நீர்பாசனத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

கீழ் பவானித்திட்டம்,

மேட்டூர் கால்வாய்த்திட்டம்,

காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி  திட்டம்,  

மணிமுத்தாறு,

 அமராவதி,

வைகை,

சாத்தனூர்,

கிருஷ்ணகிரி,

ஆரணியாறு ஆகியவையாகும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை கிராமங்களுக்குக் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காகக் காமராசரால் கட்டப்பட்ட மாத்தூர் தொட்டிப் பாலம் ஆசியாவின் மிகப்பெரிய தொட்டிப்பாலமாக இன்றளவும் உள்ளது.

அவர் காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகளும்:

பாரத மிகு மின் நிறுவனம்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்

மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம் (MRL இதன் தற்போதைய பெயர் CPCL)

இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ICF)

நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை

கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை

மேட்டூர் காகிதத் தொழிற்சாலை

குந்தா மின் திட்டமும், நெய்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின் வெப்ப மின் திட்டங்களும் காமராசரால் ஏற்படுத்தப்பட்டவை.

காமராசர் முதல் அமைச்சரான முதல் ஆண்டிலேயே அனைத்துத் தொடக்கப்பள்ளி ஆசிரியர் களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்க ஆணையிட்டார். பின்னர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் அதன்பின்னர் தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்கும்படி ஓய்வு ஊதியத் திட்டத்தை நீட்டித்தார்

மூன்று முறை (1954–57, 1957–62, 1962–63) முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காமராசர், பதவியைவிடத் தேசப்பணியும் கட்சிப்பணியுமே முக்கியம் என்பதை மக்களுக்கும் குறிப்பாகக் கட்சித் தொண்டர்களுக்கும் காட்ட விரும்பிக் கொண்டு வந்த திட்டம் தான் K-PLAN எனப்படும் ‘காமராசர் திட்டம்’ ஆகும்.

அதன்படி கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்து விட்டுக் கட்சிப்பணியாற்றச் செல்ல வேண்டும் என்று இவர் நேருவிடம் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டார் நேரு.

இந்தத் திட்டத்தை முன்மொழிந்த கையோடு தன் முதலமைச்சர் பதவியைப் பதவி விலகல் செய்து (2. அக்டோபர் 1963) பொறுப்பினை பக்தவத்சலத்திடம் ஒப்படைத்து விட்டு டெல்லி சென்றார் காமராசர். அக்டோபர் 9 அன்று அகில இந்தியக் காங்கிரசின் தலைவர் ஆனார். லால் பகதூர் சாசுதிரி, மொரார்சி தேசாய், எசு. கே. பாட்டீல், செகசீவன்ராம் போன்றோர் அவ்வாறு பதவி துறந்தவர்களில் முக்கியமானவர்கள்.

அகில இந்திய அளவில் காமராசரின் செல்வாக்கு கட்சியினரின் மரியாதைக்குரியதாக இருந்தது. அதனாலேயே 1964 இல் சவகர்லால் நேரு இறந்தவுடன் இந்தியாவின் தலைமை அமைச்சராக லால் பகதூர் சாசுதிரியை முன்மொழிந்து காமராசர் சொன்ன கருத்தினை அனைவரும் ஏற்றனர்.

1966-ல் லால் பகதூர் சாஸ்திரியின் திடீர் மரணத்தின்போது ஏற்பட்ட அசாதாரண அரசியல் சூழ்நிலையின்போது இந்திரா காந்தியை தலைமை அமைச்சராக வரச் செய்ததில் காமராசருக்குக் கணிசமான பங்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.