சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள தடுப்பூசி மையத்தில், ஐதராபாத்தைச் சேர்ந்தபாரத் பயோடெக் நிறுவனம் தடுப்பூசி தயாரிக்க தயாராக உள்ளது. இதற்கான அனுமதி மத்தியஅரசிடம் இருந்து கிடைத்ததும் பணிகள் தொங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா 2வது அலையின் தாக்கத்தின்போது, தடுப்பூசிகளுக்கும் கடும் பற்றாக்குறை எழுந்தது. இந்த காலக்கட்டத்தில், தமிழ்நாட்டில் பதவி ஏற்ற முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான மாநில அரசு, செங்கல்பட்டு தடுப்பு மையத்தில் தடுப்பூசி தயாரிப்பது குறித்து ஆலோசனை நடத்தியது.
இந்த தடுப்பூசி பூங்கா கடந்த 2012-ம் ஆண்டு சுமார் ரூ. 600 கோடி செலவில் தொடங்கப்பட்டது. ஆனால் இதுவரை செயல்படாமல் முடங்கியுள்ளது. இந்த மையத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் நேரல் சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள அதிகாரிகளிடம், இங்கு தடுப்பூசியை உறபத்தியை மீண்டும் தொடங்கலாமா? எத்தனை தடுப்பூசிகளை தயாரிக்க வேண்டும்? இதற்கான பணிகள் தொடங்குவது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டறிந்தார்.
பின்னர் இது தொடர்பாக பாரத் பயோடெக் நிறுவன அதிகாரிகளை அழைத்து ஆய்வு செய்ததுடன், அவர்களுடன் முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
இதற்கிடையில், மத்தியஅரசு தடுப்பூசி வளாகத்தை செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தனியார் நிறுவனங்களோ, பிற அரசுத்துறை நிறுவனங்களோ 15 ஆண்டுகளுக்கு பயன்படுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை கோரியது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
செங்கல்பட்டு மையத்தில் தடுப்பூசி தயாரிக்க பாரத் பயோடெக் உள்பட 3 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளதாக கூறப்பட்டது. செங்கல்பட்டு தடுப்பூசி வளாகம் தனியாருக்கு வழங்கப்பட்டால், எந்த நோக்கத்திற்காக அது அமைக்கப்பட்டதோ, அந்த நோக்கமே சிதைந்து விடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், செங்கல்பட்டு தடுப்பூசி வாளகத்தில், பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்காக ஏலத்தில் எடுக்க தீவிரமாக முயன்று வருவதாக கூறப்படுகிறது.
தமிழக அரசின் முயற்சிகள் ஒருபுறம் இருந்தாலும், செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் ஹெச்எல்எல் பயோடெக் நிறுவனத்தைத் தனியாருக்குக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஆனால், தமிழ்நாடு அரசு, தடுப்பூசி தேவைகள் இருப்பதால், கோவாக்சின் தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என மத்தியஅரசை வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக டெல்லி செல்லும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மத்திய சுகாதாரத்துறையிடம் பேசி அதற்கான அனுமதியை பெறுவார் என்றும் கூறப்படுகிறது.