டெல்லி: நாடு முழுவதும் இதுவரை 38,34,22,136 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 39% பேர் 18-44 வயதுக்குட்பட்டோர் என மத்தியஅரசு தகவல் வெளியிட்டு உள்ளது. தடுப்பூசி போடும் பணி 6 மாதங்களை கடந்து 7வது மாதத்தில் காலடி எடுத்து வைத்துள்ளது.
கொரோனா தொற்று பரவலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி எடுத்துக்கொள்வதே சிறந்ததாக கூறப்படுகிறது. ஆரம்பக்கட்டத்தில் மக்களிடையே தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் ஆர்வம் இல்லாத நிலையில், கொரோனாவின் 2வது அலையின் தாக்கத்தில் ஏராளமானோர் பாதிப்புக்குள்ளானதைத் தொடர்ந்து, தடுப்பூசி போடுவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தற்போது நாடு முழுவதும் 18 முதல் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. விரைவில் 12 வயது முதல் 18 வயது உடையோருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளும், குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு, அவர்களுக்கான தடுப்பூசி தயாரிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்தியாவில் முதல்கட்டகமாக ஜனவரி 16ந்தேதி 45வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதைத்தொடர்ந்து, மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போடும் பணி 6 மாதங்களை கடந்துள்ளது, இன்று 181 வது நாளாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நாட்டில் அதிகபட்சமாக 18 முதல் 44 வயதுக்குட்பட்டோருக்கு 39 சதவிகிதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், 45 முதல் 60 வயதுக்குட்பட்டோருக்கு 34.5 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதே வேளையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 26.5 சதவிகிதமும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டும் என்று மத்தியஅரசு கூறி வருகிறது. ஆனால், நாடு முழுவதும் இதுவரை 38,34,22,136 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இவர்களில், 30,82,99,979 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி மட்டுமே போடப்பட்டு உள்ளதாகவும், 7,51,22,157 பேருக்கு மட்டுமே 2 டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.