சென்னை

வேட்புமனுவில் தகவல்களை மறைத்ததால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட நத்தம் விஸ்வநாதன் வெற்றி பெற்றார்.   அவர் வேட்பு மனுவில் தகவல்களை மறைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.  இதையொட்டி திண்டுக்கல்லைச் சேர்ந்த சபாபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் ரூ.4.75 கோடி வருமானவரி செலுத்தியது குறித்து வருமானவரித்துறை வழக்கு தொடர்ந்தது.   அந்த வழக்கு வருமானவரித்துறை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது.  அத்துடன் கடந்த 2019 ஆம் ஆண்டு அவர் சொத்துக்களை வரி பாக்கி ரூ.279 கோடிக்காக முடக்கம் செய்து வருமானவரித்துறை உத்தரவு பிறப்பித்து இருந்தது.

நத்தம் விஸ்வநாதன் இந்த தகவல்களைத் தனது வேட்புமனுவில் தெரிவிக்காமல் மறைத்துள்ளார்.   இது குறித்துத் தேர்தல் ஆணையத்துடம் புகார் அளித்தேன். எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.   எனது புகார் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” எனச் சபாபதி கோரி இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தலைமையிலான அமர்வு மனுதாரரை இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்குமாறு உத்தரவிட்டது.  அத்துடன் இந்த புகார் குறித்து வேட்பாளரிடம் உரிய பதிலை பெற்று அந்த பதிலின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவு இடப்பட்டுள்ளது.