சென்னை: தமிழ்நாடு புதுச்சேரி இடையே 70 நாட்களுக்குப் பிறகு இன்று பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ளது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா 2வது அலையின் தாக்கம் தீவிரமடைந்ததால், கடந்த மே மாதம் முதல் தமிழ்நாடு அரசு பொது முடக்கத்தை அறிவித்தது. இதனால் போக்குவரத்துக்களும் முடங்கின. அதையடுத்து கொரோனா குறையத்தொடங்கியதால், படிப்படியாக பல்வேறு தளர்வுகளையும் அறிவித்து வந்தது. அதன்படி, கடந்த 5ந்தேதி முதல் தமிழ்நாட்டில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் மேலும் தளர்வுகள் வழங்கி, 12ந்தேதி முதல் புதுச்சேரி உள்பட அண்டை மாநிலங்களுக்கு பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்கியது. அதன்படி இன்று முதல் (ஜூலை 12) புதுச்சேரிக்கு பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது. மற்ற மாநிலங்களுக்கு செல்ல இ-பாஸ் நடைமுறை உள்ளது.
இந்த நிலையில்,சுமார் 70 நாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் இருந்து இன்று புதுச்சேரிக்கு பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. முதலில் இன்று காலை கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு பேருந்துகள் இன்று இயக்கப்பட்டன. அதையடுத்து சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது.