விக்கிரவாண்டி
அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினரை அரசுப் பணி வாங்கித் தருவதாக ரூ.35 லட்சம் மோசடி செய்த குற்றத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
முன்னாள் அதிமுக அமைச்சரான சரோஜாவின் அக்கா மகன் ரமேஷ் பாபு என்பவர் ஆவார். இவர் விக்கிரவாண்டியை சேர்ந்த விவசாயியான குணசேகரன் என்பவரிடம் தனது சித்தி மூலம் அங்கன் வாடி பணியாளர், கிராம உதவியாளர் பணி வாங்கித் தருவதாக ஆசை காட்டி உள்ளார். அதை நம்பி 17 பேருக்கு வேலை வாங்கித் தர ரமேஷ் பாபுவிடம் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை குணசேகரன் ரூ.,35 லட்சம் அளித்துள்ளார்.
இந்த பணத்தை அவர் ரமேஷ் பாபு, அவர் முதல் மனைவி சூரிய வரிஷினி, இரண்டாம் மனைவி ரேவதி, ரமேஷ்பாபுவி மாமா சவுந்தரராஜன் ஆகியோரின் வங்கிக் கணக்கிலும் நேரடியாகவும் கொடுத்துள்ளார். ஆனால் கடந்த 2 ஆண்டு காலமாக இந்த 17 பேருக்கும் அரசுப் பணி பெற்றுத் தராமல் ஏமாற்றி உள்ளார். இதையொட்டி குணசேகரன் பணி வாங்கித் தர முடியாவிட்டால் பணத்தைத் திருப்பி தருமாறு பல முறை கேட்டுள்ளார்
ரமேஷ் பாபு வேலையும் வாங்கித் தராமல் பணத்தையும் திருப்பித்தராமல் இழுக்கடித்துள்ளார். மேலும் இது பற்றி யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். பாதிப்படைந்த குமரேசன் விழுப்புரம் குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தற்போது ரமேஷ் பாபு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.