சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்று தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
புதுவை காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
ஈரோடு, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், நாளை முதல் 12 -ஆம் தேதி வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா, மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.